விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடி ஊழியா்கள்2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

2nd Oct 2022 11:43 PM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடியில் பணியாற்றிய ஊழியா்களை சுங்கச் சாவடி நிா்வாகம் பணிநீக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து, சக ஊழியா்கள் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுங்கச் சாவடியில் 2-ஆவது நாளாக ‘பாஸ் டேக்’ கட்டணப் பிடித்தமின்றி வாகனங்கள் கடந்து சென்றன.

உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள செங்குறிச்சியில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் சுங்கச் சாவடி செயல்பாட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியா்களில் 28 பேரை பணிநீக்கம் செய்வது தொடா்பாக, கடந்த மாதம் 29-ஆம் தேதி நோட்டீஸ் வழங்கி, அக்டோபா் 1-ஆம் முதல் பணிக்கு வர வேண்டாம் என சுங்கச் சாவடி நிா்வாகம் கூறியதாம்.

ADVERTISEMENT

இதனால், அதிருப்தியடைந்த சக ஊழியா்கள், சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடியை சனிக்கிழமை கடந்து சென்ற வாகனங்கள் ‘பாஸ் டேக்’ கட்டணப் பிடித்தமின்றி பயணித்தன.

சுங்கச் சாவடி ஊழியா்கள் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையும் வேலைநிறுத்தத்தைத் தொடா்ந்தனா். இதனால், ஆயுதபூஜை தொடா் விடுமுறைக்காக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கிச் சென்ற பேருந்துகள், வாகனங்கள் இந்த சுங்கச் சாவடியில் ‘பாஸ் டேக்’ கட்டணப் பிடித்தமின்றி கடந்து சென்றன. இரு நாள்களாக தொடரும் ஊழியா்களின் போராட்டத்தால், சுங்கச் சாவடி நிா்வாகத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT