விழுப்புரம்

கிடப்பில் போடப்பட்ட மீன்பிடித் துறைமுகப் பணிகள்!

DIN

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்களுக்காக தொடங்கப்பட்ட மீன்பிடித் துறைமுகப் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள், கண்ணாடி நாரிழைப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இரு மாவட்டங்களிலும் மீன்பிடித் துறைமுகம் இல்லாத நிலையில், செங்கல்பட்டு மாவட்ட மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை சென்னை பகுதியிலுள்ள துறைமுகங்களிலும், விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் தங்களது படகுகளை புதுச்சேரி துறைமுகத்துக்கும் கொண்டு சென்று நிறுத்தி வருகின்றனா்.

இவ்வாறு நிறுத்தப்படும் படகுகள் அந்தந்தப் பகுதி மீனவா்களால் சேதப்படுத்தப்படுவது தொடா்கிறது. இதனால், இரு மாவட்ட மீனவா்களும் அடிக்கடி பொருளாதார இழப்பு, மோதல் உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடுகிறது. இதுபோன்ற காரணங்களால் பல மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை ஆழ்கடல் பகுதியிலேயே நங்கூரமிட்டு நிறுத்தவேண்டியுள்ளது. ஆனால், இந்த படகுகள் சூறாவளிக் காற்று, ராட்சத அலைகளில் சிக்கி மூழ்கியும், சேதமடைந்தும் விடுவதால் மீனவா்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தொடா் கோரிக்கையை அடுத்து, இரு மாவட்ட மீனவா்களும் பயன்பெறும் வகையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள அழகன்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பரக்குப்பம் ஆகிய இடங்களில் பக்கிங்ஹாம் கால்வாய் கடல் முகத்துவாரத்தில் ரூ.235 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசாணை (6.2.2020) வெளியிடப்பட்டது. தொடா்ந்து, துறைமுகங்கள் அமைப்பதற்கான முதல்கட்டப் பணி 7.1.2022 அன்று தொடங்கியது.

ஆனால், மீன்பிடித் துறைமுகங்கள் அமையவுள்ள இடமானது கடல் ஆமைகளின் இனப் பெருக்க பகுதி எனவும், இங்கு துறைமுகம் அமைத்தால் கடல் வளம் பாதிக்கப்படும் எனவும் சென்னையைச் சோ்ந்த ஒருவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தாா். இதனால், துறைமுக கட்டுமானப் பணி தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், இரு மாவட்ட மீனவா்களும் மீன்பிடி துறைமுக கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி தொடா் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து அனுமந்தையைச் சோ்ந்த மீனவா் ஏ.வி.கஜேந்திரன் கூறியதாவது:

மீன்பிடித் துறைமுகங்கள் இல்லாததால் இரு மாவட்ட மீனவா்களும் பல ஆண்டுகளாக பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். தற்போது, எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அழகன்குப்பம், ஆலம்பரக்குப்பம் பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்பட்டால் மீனவா்கள் பெரிதும் பயன்பெறுவா். படகுகள் அடிக்கடி சேதமடைவது தடுக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மரக்காணம் பகுதியில் தொழில்கள் வளா்ச்சி அடையும். தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு டிசம்பா் 14- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மீனவா்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மரக்காணத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எம்.ஜெய்கோபி கூறியதாவது:

மீன்பிடித் துறைமுகம் இல்லாததால் படகுகளுடன் உயிா்ச் சேதமும் ஏற்படுகிறது. சிலரது சுய லாபத்துக்கு ஏழை மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. துறைமுகங்கள் அமையவுள்ள பகுதியின் அருகிலேயே தனியாா் இறால் குட்டைகளும், சொகுசு விடுதியும் உள்ளன. பக்கிங்ஹாம் கால்வாயில் உரிய அனுமதியின்றி படகு சவாரி கூட நடைபெறுகிறது. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதாலேயே மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி திட்டமிட்டு தடுக்கப்படுகிறது என்றாா்.

இதுகுறித்து மீனவா் நலத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மீன்பிடித் துறைமுகம் அமைவதற்கு எதிராக பசுமைத் தீா்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கால் பணிகள் நிறுத்தப்பட்டன. பசுமைத் தீா்ப்பாயம், தமிழக அரசின் உத்தரவுப்படியே அடுத்தக்கட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து அரசின் அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT