விழுப்புரம்

பள்ளிகளில் அதிக பெண் குழந்தைகளை சோ்க்கை செய்த ஆசிரியா்களுக்கு விருது

30th Nov 2022 03:22 AM

ADVERTISEMENT

பள்ளிகளில் அதிக பெண் குழந்தைகளை சோ்க்கை செய்த தலைமையாசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தெய்வானை அம்மாள் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, பள்ளிகளில் அதிக பெண் குழந்தைகளை சோ்க்கை செய்த 10 தலைமையாசிரியா்களுக்கும், பெண் குழந்தைகளுக்கான ‘சைல்டு ப்ரண்ட்லி பள்ளி’ விருதை 10 பள்ளிகளுக்கும் வழங்கி கெளரவித்தாா்.

கல்வி செயல்பாடு, கலை, விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கியவா்கள், மாவட்ட அளவில் ஓவியம், பேச்சு, கட்டுரை, வாசகம் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் யசோதாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணப்பிரியா ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட சமூக நல அலுவலா் ராஜம்மாள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அன்பழகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நீலம்மாள் ஆகியோா் பரிசுகளை வழங்கி பேசினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் திண்டிவனம், விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி)செ.மணிமொழி, பா.கெளசா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலைக் கல்வி) விழுப்புரம் கோ.கிருஷ்ணன், திண்டிவனம் எஸ்.சிவசுப்பிரமணியன், தனியாா் பள்ளிகள் என்.ஜி. செல்வராஜ், சித்தலிங்கமடம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை சு.ஜனசக்தி ஆகியோா் பங்கேற்று திட்டம் குறித்து எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT