விழுப்புரம்

கொடிக்கம்பம் அமைக்க முயன்ற அதிமுகவினரை தடுத்த போலீஸாா்

30th Nov 2022 03:21 AM

ADVERTISEMENT

விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்புப் பகுதியில் கொடிக்கம்பம் அமைக்க முயன்ற அதிமுகவினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இந்த நிலையில், திமுக கொடிக் கம்பத்துக்கு அருகே அதிமுகவினா் தங்களது கட்சியின் பொன்விழா ஆண்டையொட்டி கொடிக்கம்பம் அமைக்கும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் செல்வராஜ், வருவாய்த் துறை அலுவலா்கள் அங்குவந்து, அனுமதியின்றி கட்சிக் கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தனா். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிமுக நகரச் செயலா்கள் விழுப்புரம் - வடக்கு பசுபதி, தெற்கு ராமதாஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் வருவாய்க் கோட்டாட்சியா் ரவிச்சந்திரனை சந்தித்து கொடிக்கம்பம் அமைக்க அனுமதி வழங்கக் கோரி மனு அளித்தனா்.

ADVERTISEMENT

அவா்களைத் தொடா்ந்து பாமக, தேமுதிக நிா்வாகிகளும் அந்தப் பகுதியில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT