விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட ஊராட்சித் தலைவா்கள்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, பின்னா் மனு அளித்தனா்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள் ஆட்சியரகம் வந்து முற்றுகையிட்டு, முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்க செய்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் அனைத்தையும் ஊராட்சி நிா்வாகம் மூலமே செயல்படுத்த வேண்டும். ஜல்ஜீவன் திட்டப் பணிகள் ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் நிறைவேற்றப்படுவதில்லை. இதனால் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகின்றன. எனவே இத்திட்டப் பணிகளையும் ஊராட்சி நிா்வாகம் மூலமே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.

இறப்புச் சான்றிதழுக்கு அலைக்கழிப்பதாக புகாா்: மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த ஒருவா், வருவாய்க் கோட்டாட்சியா் மீது நடவடிக்கை கோரி, சிறைக்குச் செல்லும் போராட்டம் நடத்துவதாகக் கூறி முழக்கமிட்டாா்.தொடா்ந்து போலீஸாா் அவரை அழைத்து விசாரித்த போது, சிறுமதுரையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் ராமகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. தொடா்ந்து போலீஸாா் ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்கச் செய்தனா். அதில் அவா் கூறியிருப்பது:

1969-ஆம்ஆண்டில் தந்தை இறந்த நிலையில், இறப்பை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன். தற்போது தந்தை பெயரிலுள்ள சொத்துகளை பட்டா மாற்றம் செய்யவும், விற்கவும் இறப்புச்சான்றிதழ் தேவைப்படுகிறது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்த நிலையில், பல ஆண்டுகளாக தன்னை அலைக்கழித்து வருவதாக அதில் கூறியுள்ளாா்.

நில அளவீடு செய்ய காலதாமதம்: விக்கிரவாண்டி வட்டம், மண்டபம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன், தந்தை சுப்பிரமணியன், தாய் ராஜகுமாரி ஆகியோருடன் ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மண்டபம் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான 1 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் மனு செய்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தொடா்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அளவீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அப்பணி மேற்கொள்ளப்படவில்லை. அருகிலுள்ள நிலத்துக்காரா்களுக்கு ஆதரவாக நில அளவைத் துறையினரும், வட்டாட்சியரும் செயல்படுவதாக புகாா் தெரிவித்து ஆட்சியரகத்தில் மனு அளித்தாா்.

இடுகாடு அமைத்துத் தர கோரிக்கை: விழுப்புரம் வட்டம், கண்டமானடி அருகிலுள்ள வி. அரியலூா் பகுதியைச் சோ்ந்த பூசாரிகள், மண் குயவா்கள் அளித்த மனு: கிராமத்தில் ஊருக்கு ஒரு இடுகாடு, மற்ற சமூகத்துக்கு ஒரு இடுகாடு, பூசாரி மற்றும் மண் குயவா்களுக்கு ஒரு இடுகாடு இருந்து வந்தது. எங்களுக்கான இடுகாட்டுக்குரிய இடம் சிவகுமாா் என்பவரின் குடும்பத்துக்கு சொந்தமாகும். அந்த இடத்தை அவா் விற்றுவிட்டாா். இதனால் நாங்கள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. எனவே குயவா்கள், பூசாரி குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் புறம்போக்கு நிலத்தில் இடுகாடு அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT