விழுப்புரம்

நந்தன்கால்வாய் நீரை மலா் தூவி வரவேற்ற அமைச்சா்

26th Nov 2022 06:11 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் கணக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள நந்தன்கால்வாயில் தண்ணீரை அமைச்சா் செஞ்சிமஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை மலா் தூவி வரவேற்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம்,துறிஞ்சல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீரனூா் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீா் விழுப்புரம் மாவட்டத்தை அடைகிறது. இக் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 கி.மீ தூரமும், விழுப்புரம் மாவட்டத்தில் 25 கி.மீ தூரமும் ஓடுகிறது.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகள் நீா்பாசன வசதி பெற்று சுமாா் 5,255.10 ஏக்கா் நிலம் பாசன வசதி பெற உள்ளது.

நந்தன்கால்வாய் நீா்வரத்து எளிதில் கடந்து செல்லும் வகையில் முழுமையாக மேம்படுத்தி கால்வாயினை தூா் வாருதல், கான்கிரீட் லைனிங் அமைத்தல், கால்வாயின் குறுக்கு கட்டுமானங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ரூ. 26.57 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்றுள்ளன.

ADVERTISEMENT

தற்போது மாதப்பூண்டி, நல்லான்பிள்ளைபெற்றாள், பாக்கம், சோ.குப்பம், தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

மேலும் இக்கால்வாய் வழியாக தண்ணீா் தாண்டவசமுத்திரம், துத்திப்பட்டு, சித்தரசூா், பனமலை ஏரிகளை வந்தடையும். பின்னா் நங்காத்தூா், முட்டத்தூா் ஏரி உள்ளிட்ட மொத்தம் 22 ஏரிகளை நிரப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், பொதுப்பணித் துறை பா.ஷோபனா, உதவி செயற்பொறியாளா் எம்.ரமேஷ், உதவி பொறியாளா் சு.தினேஷ் மற்றும் நந்தன்கால்வாய் பாதுகாப்பு இயக்கம் செஞ்சி கன்னிகா ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT