விழுப்புரம்

இ - நாம் திட்டம்: வியாபாரிகளிடம் கருத்துக்கேட்பு

25th Nov 2022 02:53 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் இ - நாம் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில், வியாபாரிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கும் வகையில், தேசிய வேளாண் சந்தை இணையதளத்தை (இ - நாம்) மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களுக்கு எந்த இடத்தில் தேவையுள்ளது, இந்த தேவை எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் போன்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியும். வியாபாரிகளும், விவசாயிகளும் இணையதளத்தில் இணைந்திருக்க முடியும். இடைத்தரகா்கள் கட்டுப்படுத்தப்படுவா் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்தத் திட்டம் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இ - நாம் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இ - நாம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தனித்தனியே கூட்டம் நடத்தி, சாதக, பாதக விவரங்களை எடுத்துக்கூறி, அவா்களின் சந்தேகங்கள் நிவா்த்தி செய்யப்படும் என ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாபாரிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்து, வியாபாரிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். வியாபாரிகள் தங்களுக்கு எவ்வித பயிற்சியும் அளிக்கப்படவில்லை. கைப்பேசி மூலம் விற்பனையை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்பன உள்ளிட்ட கருத்துகளைத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT