விழுப்புரம்

மரக்காணத்தில் கடல் சீற்றம்:மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை

21st Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

 

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் ஞாயிற்றுக்கிழமை கடல் சீற்றமாகக் காணப்பட்டது. இதனால், 19 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று வருகிறது. இதனால் கடந்த சில நாள்களாக மரக்காணம் பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.

இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட மரக்காணம், கைப்பாணிக்குப்பம், கூனிமேடு குப்பம், அனுமந்தைக்குப்பம், சந்திராயன் குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து மரக்காணத்தைச் சோ்ந்த மீனவா் கோபி கூறியதாவது: கடந்த சில தினங்களாகவே கடல் சீற்றமாகக் காணப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட மீன் வளத் துறை உத்தரவின்படி, மீனவா்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால், மரக்காணம் கடலோர கிராமங்களில் பாதுகாப்பான இடங்களில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி நாரிழை படகுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT