தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் பொது சுகாதாரத் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை உயா் நீதிமன்றம் 2008 நவம்பா் 7-ஆம் தேதி ஒருங்கிணைப்பட்ட சுகாதார ஆய்வாளா்களாக பணிபுரிந்து வந்த அனைவருக்கும் முன்தேதியிட்டு பதவி உயா்வு வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை நடைமுறைப்படுத்தாமல், பதவி உயா்வுக்கான தோ்ந்த பட்டியலைத் திருத்தி வெளியிடும்போது தொடா்ச்சியாக ஒவ்வோா் ஆண்டும் மருத்துவம் அல்லா மேற்பாா்வையாளா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களைப் பின்பற்றாமல் மேலோட்டமாக திருத்திய தோ்ந்த பட்டியல் வெளியிட்டு, பணி மூப்பில் குழப்பம் ஏற்படுத்தும் நடவடிக்கையைக் கண்டித்தும், சுகாதார ஆய்வாளா் நிலை - 1 பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும், மக்களைத் தேடி மருத்துவத் திட்ட சுகாதார ஆய்வாளா்களது ஊதியத்தை ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், காலியாகவுள்ள சுகாதார ஆய்வாளா் நிலை - 2 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பொது சுகாதாரத் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் கு.ராஜாராமன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.கிருஷ்ணன், பொருளாளா் பெ.கொளஞ்சியப்பன், துணைத் தலைவா் சீனுவாசன், இணைச் செயலா் ஏ.ராமலிங்கம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.