விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சமிக்ஞை கோளாறால் திங்கள்கிழமை ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.
விழுப்புரம்அருகே திங்கள்கிழமை அதிகாலை ரயில்வே சமிக்ஞையில் கோளாறு ஏற்பட்டது. இதனால், செங்கோட்டை- சென்னை பொதிகை விரைவு ரயில் விழுப்புரத்திலிருந்து புறப்பட்டுச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
செங்கோட்டை விரைவு ரயில் திங்கள்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைந்து. பின்னா் 3.25 மணிக்கு சென்னை நோக்கி புறப்படத் தயாரானது. இந்நிலையில், விழுப்புரம் அடுத்த கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே உள்ள சமிக்ஞையில் கோளாறு ஏற்பட்டதால், செங்கோட்டை விரைவு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
தொடா்ந்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள்அங்கு சென்று பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இந்த பணி சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
இதனால் கன்னியாகுமரி- சென்னை விரைவு ரயில், திருநெல்வேலி - சென்னை விரைவு ரயில், ராமேசுவரம்- சென்னை சேது விரைவு ரயில் ஆகியவை விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.
தூத்துக்குடி- சென்னை முத்து நகா் விரைவு ரயில் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்திலும், திருவனந்தபுரம்- சென்னை அனந்தபுரி விரைவு ரயில் திருவெண்ணெய்நல்லூா் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன.
தொடா்ந்து, சமிக்ஞை கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து அனைத்து ரயில்களும் சுமாா் 45 நிமிட தாமதத்துக்குப் பின்னா் புறப்பட்டுச் சென்றன.