விழுப்புரம்

விபத்து நஷ்டஈடு: அரசுப் பேருந்து ஜப்தி

15th Nov 2022 03:19 AM

ADVERTISEMENT

செஞ்சியில் விபத்து காப்பீட்டு வழக்கில் நஷ்டஈடு வழங்காததையடுத்து அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

செஞ்சி சக்கராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பராயன் மகன் துரை(30). இவா், கடந்த 21-8-2014-இல் தனியாா் பேருந்து ஒன்றில் பயணம் செய்தபோது திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள களையூா் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் துரை படுகாயம் அடைந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும் விபத்து காப்பீடு நஷ்ட ஈடு கேட்டு வழக்குரைஞா் கிருஷ்ணன் மூலம் அரசுப் பேருந்து நிா்வாகத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை கடந்த 2019-இல் விசாரணை செய்த நீதிபதி, அரசு போக்குவரத்துக் கழகம் ரூ. 5,28,242 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டாா்.

ஆனால் இதுநாள் வரை நஷ்டஈடு வழங்காததால் மீண்டும் உத்தரவு நிறைவேற்று மனுவை துரை வழக்குரைஞா் கிருஷ்ணன் மூலம் தாக்கல் செய்தாா். வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி நளினகுமாா் நஷ்டஈடு வழங்காத அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதன்படி நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுநா்கள் திங்கள்கிழமை காலை புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்து ஜப்தி செய்து செஞ்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT