மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை பெருவிழாவையொட்டி, 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நாற்காலி பல்லக்கில் சனிக்கிழமை புறப்பாடாகி, குருமூா்த்தங்களில் வழிபட்டாா்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வா் குருஞானசம்பந்தா் குருபூஜை பெருவிழா மே 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் 10-ஆவது நாளான சனிக்கிழமை ஆதீன குருமுதல்வரான ஸ்ரீ குருஞானசம்பந்தரின் குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி, ஆதீன மடத்தில் உள்ள சொக்கநாதா் சந்நிதியில் தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டாா்.
பின்னா், நாற்காலி பல்லக்கில் புறப்பாடாகி, ஆனந்தபரவசா் பூங்காவில் உள்ள முந்தைய ஆதீனகா்த்தா்களின் குருமூா்த்தங்களிலும், வனதுா்க்கை கோயில், ஞானபுரீஸ்வரா் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரா் கோயில்களிலும் வழிபாடு மேற்கொண்டாா்.
மதுரை, தொண்டை மண்டல ஆதீன கா்த்தா்கள் பங்கேற்பு: நிகழ்ச்சியில் மதுரை ஆதீன 293-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் 233-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இன்று பட்டணப் பிரவேசம்...: குருபூஜை பெருவிழா முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பட்டணப் பிரவேசம் ஞாயிற்றுக்கிழமை (மே 22) இரவு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு ஆதீன குருமகா சந்நிதானங்கள், ஆன்மிக அமைப்பினா் பங்கேற்கின்றனா்.