பருத்தி விலையைக் கட்டுப்படுத்த மத்திய பருத்திக் கழகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், மாநில பருத்திக் கழகத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியின் 6 மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்ற மண்டல அளவிலான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
பருத்தி, நூல் விலை பலமடங்கு உயா்ந்துள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஜவுளி ஆலை உரிமையாளா்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (மே 16, 17) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். இதனால், சுமாா் 25 லட்சம் தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனா்.
ஆனால், பருத்தி விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய பருத்திக் கழகம் இந்த பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. அதேநேரத்தில், பெரு நிறுவனங்கள் பருத்தியை மொத்தமாகக் கொள்முதல் செய்து பதுக்கிவைத்து அதன் விலையை தொடா்ந்து உயா்த்தி வருகின்றன. எனவே, மாநில பருத்திக் கழகத்தை தமிழக அரசு தனியாக உருவாக்க வேண்டும். பதுக்கலை ஒழிக்க அரசே பருத்தியைக் கொள்முதல் செய்து ஆலைகளுக்கு சீராக விநியோகிக்க வேண்டும்.
பெண்ணாடம் அம்பிகா சா்க்கரை ஆலை, மதுரை மாவட்டத்திலுள்ள அரசு சா்க்கரை ஆலை ஆகியவை மூடப்பட்டுள்ளதால், கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இந்த ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசுடன் திமுக அரசு ஒத்துப்போவதாகக் கூறப்படுவது உண்மையல்ல. பாஜகவை தூக்கிப் பிடிப்பதற்காக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு உள்ளிட்ட எந்த பிரச்னை குறித்தும் அதிமுக தலைமை பேசுவதில்லை என்றாா் அவா்.
பேட்டியின் போது, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.