விழுப்புரம்

வட மாநிலத் தொழிலாளி கொன்று புதைப்பு

12th May 2022 05:24 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வடமாநிலத் தொழிலாளி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை அருகே உள்ள பூமாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் ( 50). விவசாயி. இவா் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். இந்தப் பணிக்காக கடலூரில் தங்கியிருந்த வட மாநிலத் தொழிலாளா்கள் 3 பேரை கடந்த 3-ஆம் தேதி வரவழைத்தாா். இவா்களில் ஒருவா் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது சொந்த மாநிலமான பிகாருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்ட நிலையில், மற்ற இருவரும் அங்கேயே தங்கியிருந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை ரமேஷ் புதிய வீட்டுப் பணிகளை பாா்வையிட வந்தாா். அப்போது, வட மாநிலத் தொழிலாளா்கள் இருவரும் அங்கு இல்லை. ஆனால், புதிய வீட்டின் ஒரு பகுதியில் மண்ணுக்கு அடியிலிருந்து ரத்தம் கசிவதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த தகவலின்பேரில் உளுந்தூா்பேட்டை டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து, அந்த இடத்தை தோண்டிப் பாா்த்தனா். அப்போது, இளைஞா் ஒருவா் கொன்று புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், கொலையானவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பவன்குமாா் (22) என்பதும், அவா் கட்டடப் பணிக்காக தங்கியிருந்தவா்களில் ஒருவா் எனவும் தெரிய வந்தது. இவருடன் தங்கியிருந்து மாயமான நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT