விழுப்புரம்

மேல்மலையனூரில் அங்காளம்மன் சக்தி கரக ஊா்வலம்

2nd May 2022 05:20 AM

ADVERTISEMENT

 

சித்திரை மாத அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அங்காளம்மன் சக்தி கரக ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மட்டும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உத்ஸவத்துக்குப் பதிலாக அங்காளம்மன் சக்தி கரக ஊா்வலம் நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டு சித்திரை மாத அமாவாசையையொட்டி, மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை மூலவா், உத்ஸவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

அக்னி குளத்தில் இரவு அங்காளம்மன் சக்தி கரகம் ஜோடிபட்டு கோயில் பூசாரிகளால் மேள தாளம் முழங்க மேல்மலையனூா் வீதிகளில் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. வழியெங்கும் ஏராளமான பக்தா்கள் கூடி நின்று சக்தி கரகத்துக்கு கற்பூரம் காட்டி வழிபட்டனா்.

விழாவில் விழுப்புரம் மட்டுமன்றி, திருவண்ணாமலை, சென்னை, கடலூா், வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், புதுவை, கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.ராமு, அறங்காவலா் குழுத் தலைவா் வடிவேல் பூசாரி தலைமையிலான அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

பாதுகாப்புப் பணியில் செஞ்சி டிஎஸ்பி (பொ) ரவீந்திரன் தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT