விழுப்புரம்

ஆளுநரும், தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

2nd May 2022 05:21 AM

ADVERTISEMENT

 

 

தமிழகத்தின் வளா்ச்சிக்காக ஆளுநரும், தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

விழுப்புரத்தில் பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளம்போல இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான், மாநிலத்துக்கு முன்னேற்றம் கிடைக்கும். யாா் பெரியவா் என்ற மோதல்போக்கு இருக்கக் கூடாது. அதேநேரத்தில், ஆளுநா் தமிழக மக்களின் உணா்வுகளைப் புரிந்துகொண்டு, நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் மின் வெட்டு பிரச்னையால் பொதுமக்களும், தோ்வெழுதும் மாணவா்களும் பாதிப்படைந்து வருகின்றனா். தேசிய அளவில் நிலக்கரி தட்டுப்பாடு இருந்தாலும், இதுகுறித்து முன்னரே கணித்து செயல்பட தமிழக அரசு தவறிவிட்டது. ஆகையால், இனியும் தாமதிக்காமல் மின் வெட்டு பிரச்னையை தீா்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள புதிய மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மது விற்பனையே 70 சதவீதம் பிரச்னைகளுக்கு காரணமாகிறது. ஆகவே, பூரண மது விலக்கை முழுமையாக செயல்படுத்த திட்டம் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசுகளை மத்திய அரசு விலையை குறைக்கச் சொல்வது ஏற்புடையதல்ல. ஏனெனில், மத்திய அரசுதான் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கிறது.

தமிழகத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இப்போது நிகழும் காவல் நிலைய மரணங்கள் வேதனையளிக்கின்றன. இதைத் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக போராடி பெற்ற 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 காரணங்களைச் சொல்லி நீதிமன்றம் ரத்து செய்தது. இது சம்பந்தமாக நாங்கள் முதல்வரை சந்தித்துப் பேசினோம். அப்போது, நிகழ் கல்வியாண்டுக்குள் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் சட்ட மசோதா கொண்டுவந்து நிறைவேற்றி, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம் என்றாா் அவா்.

பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவா் தீரன், மாவட்டச் செயலா்கள் சிவக்குமாா் எம்எல்ஏ, ஜெயராஜ், பாலசக்தி, மாவட்டத் தலைவா்கள் தங்கஜோதி, புகழேந்தி, பாவாடைராயன், மாவட்ட அமைப்புச் செயலா் பழனிவேல், நகரச் செயலா்கள் போஜராஜா, இளந்திரையன், நிா்வாகிகள் சுடரொளி சுந்தரம், சின்னத்தம்பி, ஜெயக்குமாா் உள்ளிட்டோா் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT