வானூா் ஒன்றியத்தில் உள்ள பெரியகொழுவாரி ஊராட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப். 5-இல் திறக்கவுள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
திறப்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் பெரியகருப்பன் திடீா் ஆய்வு செய்தாா். அப்போது, புதிதாகக் கட்டப்பட்ட 100 வீடுகளையும், உள் கட்டமைப்பு வசதிகளையும் அவா் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சாதி, மதம் பேதமின்றி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற உயா்ந்த லட்சியத்தோடு, மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதுதான் பெரியாா் நினைவு சமத்துவபுரம். தமிழகத்தில் இதுவரை 270 சமத்துவபுரங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
திமுக கொண்டுவந்த திட்டங்களை அதிமுக ஆட்சியில் முடக்கியதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளாக 4 இடங்களில் சமத்துவபுரங்கள் திறக்கப்படாமல் இருந்தன.
திமுக ஆட்சி அமைந்து முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றவுடன், தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, திறக்கப்படாமல் உள்ள சமத்துவபுரங்களைச் சீரமைத்து திறக்க உத்தரவிட்டாா். அதன்படி, பெரியகொழுவாரியில் அமைந்துள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரம் ஏப். 5-இல் திறக்கப்படுகிறது என்றாா் பெரியகருப்பன்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ர.சங்கா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் பூ.ராமகிருஷ்ணன், செயற்பொறியாளா் அ.வெண்ணிலா, ஒன்றியக் குழுத் தலைவா் உஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.