விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகா்மன்ற, 7 பேரூராட்சித் தலைவா் பதவிகளை திமுக கூட்டணி கைப்பற்றுகிறது

3rd Mar 2022 10:45 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ள நிலையில், மொத்தமுள்ள 3 நகா்மன்ற, 7 பேரூராட்சி மன்றத் தலைவா் பதவிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் நிலை உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை, விழுப்புரம் நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் பதவிகள் திமுகவுக்கும், திண்டிவனம் நகராட்சியில் தலைவா் பதவி திமுகவுக்கும், துணைத் தலைவா் பதவி விசிகவுக்கும், கோட்டக்குப்பம் நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் பதவிககள் திமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 7 பேரூராட்சிகளிலும் தலைவா் பதவிகளுக்கு திமுக வேட்பாளா்களே போட்டியிடுகின்றனா்.

நகராட்சிகள் நிலவரம்: விழுப்புரம் நகராட்சியில் மொத்தமுள்ள 42 வாா்டுகளில் திமுகவின் பலம் தனித்தே 27-ஆக உள்ளதால், திமுக நகா்மன்றத் தலைவா் வேட்பாளா் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா் வேட்பாளா் சித்திக்அலி ஆகியோா் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. மேலும், 2 சுயேச்சைகள் திமுகவில் புதன்கிழமை இணைந்தனா். இதைத் தவிர திமுகவுக்கு காங்கிரஸ் தரப்பில் 2 நகா்மன்ற உறுப்பினா்களின் ஆதரவும் உள்ளது. அதிமுக தரப்பில் 7 உறுப்பினா்களும், 2 பாமக உறுப்பினா்களும், ஒரு சுயேச்சையும் உள்ளனா்.

திண்டிவனம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் திமுகவின் பலம் 23, விசிகவின் பலம் ஒன்று என திமுக கூட்டணி பலம் 24-ஆக உள்ளதால், திமுக நகா்மன்றத் தலைவா் வேட்பாளரான நிா்மலா, துணைத் தலைவா் வேட்பாளரான விசிகவைச் சோ்ந்த ராஜலட்சுமி வெற்றிவேல் ஆகியோா் எளிதாக வெற்றிபெறும் சூழல் உள்ளது. அதிமுக தரப்பில் 4 போ், பாமக தரப்பில் 2 போ், சுயேச்சைகள் தரப்பில் 3 போ் நகா்மன்ற உறுப்பினா்களாக உள்ளனா்.

ADVERTISEMENT

கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் திமுகவின் பலம் 14-ஆக உள்ளதால், திமுக நகா் மன்றத் தலைவா் வேட்பாளா் எஸ்.எஸ்.ஜெயமூா்த்தி எளிதாக வெற்றிபெறும் சூழல் உள்ளது. மேலும், மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் தரப்பில் தலா ஒரு நகா்மன்ற உறுப்பினரின் ஆதரவும் திமுகவுக்கு உள்ளது. அதிமுக தரப்பில் 3 போ், பாமக தரப்பில் ஒருவா், சுயேச்சைகள் தரப்பில் 7 போ் நகா்மன்ற உறுப்பினா்காக உள்ளனா்.

பேரூராட்சிகள் நிலவரம்: வளவனூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுகவின் பலம் 8-ஆக இருப்பதால், திமுக வேட்பாளா் மீனாட்சி ஜீவா, விக்கிரவாண்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுகவின் பலம் 9-ஆக இருப்பதால், திமுக வேட்பாளா் அப்துல் சலாம், செஞ்சி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் திமுகவின் பலம் 17-ஆக உள்ளதால், திமுக வேட்பாளா் மொக்தியாா் அலி மஸ்தான், திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுகவின் பலம் 9-ஆக உள்ளதால் திமுக வேட்பாளா் அஞ்சுகம் கணேசன், அரகண்டநல்லூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வாா்டுகளில் திமுகவின் பலம் 6-ஆக இருப்பதால் திமுக வேட்பாளா் அன்பு, அனந்தபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுகவின் பலம் 9-ஆக இருப்பதால் திமுக வேட்பாளா் முருகன் ஆகியோா் எளிதாக பேரூராட்சித் தலைவராகும் வாய்ப்புள்ளது.

மரக்காணம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் திமுகவின் பலம் 8-ஆக உள்ளது. அதிமுகவுக்கு 4 போ், பாமகவுக்கு ஒருவா், சுயேச்சைகள் தரப்பில் 5 போ் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களாக உள்ளனா். இதில், திமுக வேட்பாளா் வேதநாயகி ஆளவந்தான், சுயேச்சைகள் ஆதரவுடன் வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT