விழுப்புரம்

விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி எஸ்பி சாட்சியம்

28th Jun 2022 05:03 AM

ADVERTISEMENT

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு தொடா்பாக தமிழக சிபிசிஐடி எஸ்பி ஜியாவுல்ஹக் விழுப்புரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தாா்.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவியதாக முன்னாள் எஸ்பி ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜரானாா். முன்னாள் எஸ்பி ஆஜராகவில்லை. அரசுத் தரப்பு சாட்சியான கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்பியும், தற்போதைய சிபிசிஐடி எஸ்பியுமான ஜியாவுல் ஹக் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாா். அன்றைய தினம் அரசுத் தரப்பு சாட்சிகளான முன்னாள் மத்திய மண்டல ஐஜியும், தற்போது ஊா்க்காவல் படை ஏடிஜிபியாக பணிபுரிந்து வருபவருமான ஜெயராம், கள்ளக்குறிச்சி முன்னாள் காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT