விழுப்புரம்

70% மானியத்தில் சூரிய சக்தி வேளாண் பம்ப்செட்கள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

26th Jun 2022 06:46 AM

ADVERTISEMENT

 

சூரிய சக்தியால் இயங்கும் வேளாண் பம்ப்செட்களை 70 சதவீத மானியத்தில் விவசாயிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வரின் சூரிய சக்தி பம்ப் செட்கள் திட்டத்தின் கீழ், மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத் திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் 70 சதவீதம் மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசின் மானியம், 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) 2021-2022ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், முதல் தவணையாக 2000 சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்கள் ரூ.43.56 கோடி மானியத்தில் அமைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

புதிதாக ஏற்படுத்தப்படும் கிணறுகள் நிலநீா் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருக்க வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கெனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்களை அமைத்துக் கொள்ளலாம்.

இலவச மின் இணைப்பு கோரி ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் முன்னுரிமையை இழக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், விவசாயிகள் இலவச மின் இணைப்பு கோரி பதிவு செய்ய வேண்டியதில்லை.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளிக்கும் போது சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்களை நுண்ணீா் பாசன அமைப்புடன் இணைக்க உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் அருகிலுள்ள உபகோட்ட உதவி செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை (அல்லது) மாவட்ட அளவில் செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், திட்டம் குறித்து கூடுதல் விவரம் அறிய  இணையதளத்தை பாா்வையிடலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT