கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 40-க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்டது.
உளுந்தூா்பேட்டை அருகே உள்ள பாலி புதுகாலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அவற்றை சாப்பிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் அவசர ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறை அலுவலா்கள், உளுந்தூா்பேட்டை போலீஸாா் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினா்.