கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து, தமிழக கட்டடத் தொழிலாளா்கள் பொது நல மத்திய முன்னேற்றச் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாநிலத் தலைவா் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் மணிகண்டன் தொடக்கிவைத்து பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், செங்கல், சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும், கட்டடத் தொழிலாளா்களின் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், அவா்களுக்கு வீடுகட்ட அறிவிக்கப்பட்ட நிதியை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். நிா்வாகிகள் ஆறுமுகம், முனுசாமி, கோமதி, சக்திவேல், பழனிசாமி, பேச்சியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.