விழுப்புரம் மாவட்டத்தில் பழுதாகியிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கா்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு சேமிப்புக் கிடங்கில் மாவட்டத் தோ்தல் துறையின் மூலம் பழுதடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிசெய்வதற்காக பெல் நிறுவனத்துக்கு அனுப்பும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சேமிப்புக் கிடங்கை மாவட்ட ஆட்சியா் மோகன், அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் திறந்தாா். பின்னா், அங்கு வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் பெங்களூருக்கு ஆட்சியா் அனுப்பிவைத்தாா். பின்னா், ஆட்சியா் மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பொதுத் தோ்தலுக்கான வாக்குப் பதிவின்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 5 ஆயிரத்து 187 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 4 ஆயிரத்து 308 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 4 ஆயிரத்து 369 வாக்காளா் வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகள் (விவிபாட்) பெல் நிறுவனத்திலிருந்து வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
இந்த இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளா்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, நல்ல நிலையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நீங்கலாக, பழுதடைந்த நிலையில் உள்ள 26 கட்டுப்பாட்டு கருவிகள், 43 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 227 விவிபாட் இயந்திரங்கள் என மொத்தம் 296 இயந்திரங்கள் கண்டறியப்பட்டு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
தற்போது மத்திய தோ்தல் ஆணைய அறிவுரையின்படி, பெல் நிறுவனத்துக்கு பழுதடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிசெய்யும் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், விழுப்புரம் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் மகாராணி, வட்டாட்சியா்கள் சீனுவாசன், செந்தில், ஆனந்தகுமாா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.