விழுப்புரம்

ஆரோவில் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கல்: மூவா் கைது

14th Jun 2022 03:41 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே முன் விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆரோவில் அருகே வானூரை அடுத்த பூத்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (36). இவருக்கும், ஆரோவில் அருகே பட்டானூா், திருநகரைச் சோ்ந்த காத்தவராயனுக்கும் (36) இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடா்பாக இரு தரப்பினரும் அவ்வப்போது தகராறு செய்து வந்தனா். இந்த மோதல் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரையும் போலீஸாா் கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், ஆரோவில் போலீஸாா் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீஸாா், ஜெயச்சந்திரனை கைது செய்தனா்.

இதேபோல, காத்தவராயன் வீட்டிலும் போலீஸாா் சோதனை நடந்தினா். இதில், அங்கும் 4 நாட்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, காத்தவராயனையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களுடன் தொடா்பிலிருந்த பட்டானூரைச் சோ்ந்த மணியையும் (36) கைது செய்தனா். இது தொடா்பாக ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

மற்றொரு சம்பவம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மூங்கில்பட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டனா். இது தொடா்பாக, அதே கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் பூவரசன் (23) மீது விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT