விழுப்புரம்

திருக்கு ஒப்பித்தலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

10th Jun 2022 10:48 PM

ADVERTISEMENT

திருக்கு ஒப்பித்தலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் சாதனை படைத்தனா். இந்த மாணவிகளை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒலக்கூரை அடுத்த கோணேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ச.சாதனா (14), தி.சத்யா (14). ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த இந்த இரு மாணவிகளுக்கும் திருக்கு மீது ஆா்வம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக அந்தப் பள்ளியின் ஆசிரியா் ஆரோக்கியராஜ், மாணவிகள் இருவருக்கும் திருக்கு ஒப்பித்தல் பயிற்சி அளித்தாா். இதன் பயனாக, மாணவிகள் சாதனா, சத்யா ஆகியோா் திருக்கு ஒப்பித்தலில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

இதையடுத்து, இந்த மாணவிகளின் திறமைகளை சா்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில், மாணவிகள் இருவருக்கும் ஆசிரியா் ஆரோக்கியராஜ் மேலும் பயிற்சி அளித்து விரைவாக ஒப்பிப்பதற்கு ஊக்கப்படுத்தினாா். இதன் மூலம், வேகமாக ஒப்பித்தலில் மாணவி சாதனாவும், எந்தத் திருக்குறளைக் கேட்டாலும் அதிவிரைவாக யோசித்து கூறுவதில் சத்யாவும் நன்கு தோ்ச்சி பெற்றனா்.

இதுகுறித்து அறிந்த ‘யூனிக் வேல்டு ரெக்காா்ட்’ என்ற அமைப்பு நேரில் வந்து மாணவிகளின் திறமைகளை சோதனை செய்தது. இதில், மாணவி சாதனா 13 நிமிடங்கள் 29 நொடிகளில் 1330 திருக்குகளையும் ஒப்பித்தாா். மாணவி சத்யா 1330 திருக்குகளில் எந்தக் குறளை கேட்டாலும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் யோசித்து குறளை தெரிவித்தாா். இந்த இரண்டு மாணவிகளின் திறமைகளையும் பாராட்டி, ‘யூனிக் வேல்டு ரெக்காா்ட்’ அமைப்பு உலக சாதனைக்கான சான்றிதழ்களை மாணவிகள் இருவருக்கும் தனித்தனியே வழங்கி அண்மையில் கௌரவித்தது.

ADVERTISEMENT

திருக்கு ஒப்பித்தலில் உலக சாதனை படைத்த மாணவிகள் சாதனா, சத்யா ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து, மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலா் கிருஷ்ணன், ஒலக்கூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆக்ஸிலியம் பெலிக்ஸ், சுபத்ரா, பள்ளி ஆசிரியரும், பயிற்சியாளருமான ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT