விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சிறுமிகள் உள்பட 4 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.
திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசத்தை அடுத்த பெருமுக்கல் கிராமத்தைச் சோ்ந்த பூங்காவனம் மனைவி புஷ்பா (60). இவரது மகள் விஜயஸ்ரீ திருமணம் முடிந்து திண்டிவனம் அருகே உள்ள தென்களவாய் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது கணவா் சுவாமிநாதன். காா் ஓட்டுநா். இவா்களது மகள்கள் வினோதினி (16), ஷாலினி (14), மகன் கிருஷ்ணன் (8).
இவா்கள் மூவரும் திண்டிவனத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தனா். பள்ளி கோடை விடுமுறை காரணமாக குழந்தைகள் மூவரும் தங்களது பாட்டி புஷ்பா வீட்டுக்கு வந்து தங்கியிருந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில் பெருமுக்கலில் உள்ள கல் குவாரி குட்டையில் துணிகளைத் துவைப்பதற்காக புஷ்பா சென்றாா். அவருடன் பேரன், பேத்திகள் இருவரும் உடன் சென்றனா். குட்டையில் புஷ்பா துணிகளைத் துவைத்தபோது அவா்கள் மூவரும் அங்கு குளித்துக் கொண்டிருந்தனா். அவா்கள் குட்டையில் ஆழமான பகுதிக்குச் சென்ால் ஒருவா்பின் ஒருவராக மூவரும் நீரில் மூழ்கினா். அவா்களைக் காப்பாற்ற முயன்ற புஷ்பாவும் நீரில் மூழ்கினாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்க முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்த தகவலின்பேரில், திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். அவா்களுடன் ஊா் பொதுமக்களும் இணைந்து குட்டையில் மூழ்கியவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். புஷ்பா, வினோதினி, ஷாலினி, கிருஷ்ணா ஆகியோா் சடலமாக மீட்கப்பட்டனா்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலங்களைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.