விழுப்புரம்

ஜிஎஸ்டியை விலக்கக் கோரி விழுப்புரத்தில் அரிசி ஆலைகள், கடைகள் அடைப்பு

17th Jul 2022 06:54 AM

ADVERTISEMENT

 

அரிசி , கோதுமை, பருப்பு உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரியை விலக்கக் கோரி, விழுப்புரத்தில் அரிசி ஆலைகள், அரிசி விற்பனை நிலையங்கள் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.

மத்திய அரசின் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், 5 சதவீத ஜிஎஸ்டியை திரும்பப் பெறக் கோரியும், விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரிசி விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டன.

ஆலை, கடை உரிமையாளா்கள் பேரணி

ADVERTISEMENT

ஆலைகள், கடைகளை மூடிய இவா்கள், விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திரண்டனா்.

அங்கிருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து, விழுப்புரம் அரிசி ஆலை மற்றும் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவா் குபேரன் செட்டியாா் கூறியதாவது:

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் உணவுப் பொருள்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் 5 வரை உயரும்.

மாவட்டத்தில் 256 ஆலைகள் மூடப்பட்டதால் சனிக்கிழமை மட்டும் 6,000 டன் நெல் அரைவைப் பணி பாதிக்கப்பட்டது. மேலும், கடைகளில் 6,000 டன் அரிசி விற்பனை பாதிக்கப்பட்டது என்றாா்.

பேரணியில், சங்கச் செயலா் பி.எஸ்.சுல்தான், பொருளாளா் வி.வி.சி.வேல்முருகன், கௌரவத் தலைவா் அக்பா் ஷெரிப், துணைத் தலைவா்கள் தாஜுதின், சம்சுதீன், முகமது தாவுத், இணைச் செயலா் சந்தோஷ்குமாா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT