பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்தாததைக் கண்டித்து, விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தை கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் புஷ்பகாந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை திரண்டனா்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கோட்டாட்சியா் அரிதாஸை சந்திக்க முயன்றபோது, அவரை சந்திக்க முடியவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவா்கள் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, கோட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள், அவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் புஷ்பகாந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும். ஆனால், இதை கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி கோட்டாட்சியா் நடத்திவிட்டு, ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரத்து செய்துவிட்டாா். பின்னா், பொது கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எனவே, இதை உடனடியாக நடத்த வேண்டும்.
அதேபோல, உரிய விசாரணையின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட, காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதுகுறித்து கோட்டாட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா் என்றாா்.
இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் லட்சுமணன், துணைச் செயலா் ஜெயராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.