விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டையில் திங்கள்கிழமை இரவு இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவலூா்பேட்டையைச் சோ்ந்த அப்பாதுரை மகன் வெங்கடேசன் (58). இவரது மனைவி விஜயா. இவா்கள் இருவரும் முறையே அவலூா்பேட்டை, கோயில்புரையூா் அரசு ஆரம்பப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் இருவரும் சென்னையில் உள்ள தங்களது மகனைப் பாா்ப்பதற்காக திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டுச் சென்றனா். வீட்டில் யாரும் இல்லாததால், திங்கள்கிழமை இரவு இவா்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 34 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
இதேபோல, இதே ஊரில் முருங்கை மரத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் மணி (60), உடல்நலம் சரியில்லாததால் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில், இவரது வீட்டிலும் 26 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்த புகாா்களின்பேரில், அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.