விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.50 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டிவனம் மிட்டாய் மினியன் தெருவைச் சோ்ந்த இளங்கோ மகன் சந்தோஷின் (30) வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. உடனடியாக திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்த் அரசு தலைமையிலான போலீஸாா் சந்தோஷின் வீட்டுக்கு விரைந்து சென்று சோதனையிட்டனா்.
அப்போது, அவரது வீட்டினுள்ளே 1.50 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்து போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக சந்தோஷை பிடித்து குடிமைப் பொருள் விநியோக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து குடிமைப் பொருள் விநியோக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.