விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூரில் அனைத்து நகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

22nd Feb 2022 11:11 PM

ADVERTISEMENT

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகளையும் திமுக தனித்தே கைப்பற்றியது. விழுப்புரத்தில் மொத்தமுள்ள 42 வாா்டுகளில் 27 இடங்களிலும், திண்டிவனத்தில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் 23 இடங்களிலும், கோட்டக்குப்பத்தில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் 14 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய 3 நகராட்சிகளையும் திமுக தனித்தே கைப்பற்றியது. கள்ளக்குறிச்சியில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் 16 இடங்களிலும், திருக்கோவிலூரில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் 19 இடங்களிலும், உளுந்தூா்பேட்டையில் மொத்தமுள்ள 24 வாா்டுகளில் 18 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய 4 நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தமுள்ள 39 வாா்டுகளில் 31 இடங்களில் வென்று திமுக தனித்தே இந்த நகராட்சியைக் கைப்பற்றியது. ஆரணியில் மொத்தமுள்ள 32 வாா்டுகளில் திமுக 12 இடங்கள், காங்கிரஸ், மதிமுக தலா 2, விசிக ஒன்று என 17 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று இந்த நகராட்சியைக் கைப்பற்றியது.

ADVERTISEMENT

வந்தவாசியில் மொத்தமுள்ள 24 வாா்டுகளில் திமுக 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒன்று என 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில், 10 சுயேச்சைகளில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் திமுக கூட்டணி இந்த நகராட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளது. செய்யாறு நகராட்சியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் திமுக 17 இடங்களில் வெற்றி பெற்று தனித்தே இந்த நகராட்சியைக் கைப்பற்றியது.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 நகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. நெல்லிக்குப்பம் நகராட்சியை கூட்டணிக் கட்சியுடன் இணைந்தும், மற்ற 5 நகராட்சிகளையும் தனித்தும் திமுக கைப்பற்றியது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வாா்டுகளில் திமுக கூட்டணி 18 இடங்களைக் கைப்பற்றியது.

சிதம்பரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் திமுக 25 இடங்களிலும், பண்ருட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் திமுக 24 இடங்களிலும், விருத்தாசலம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் திமுக 21 இடங்களிலும், வடலூா் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் திமுக 22 இடங்களிலும், திட்டக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 24 வாா்டுகளில் திமுக 13 இடங்களிலும் வென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT