விழுப்புரம்

மனைவி வெட்டிக் கொலை: கணவா் காவல் நிலையத்தில் சரண்

17th Feb 2022 05:20 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே குடும்பத் தகராறில் புதன்கிழமை மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

திண்டிவனம் அருகே சிங்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (60). இவா், திண்டிவனத்திலுள்ள தனியாா் பேருந்து நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி செல்வி (55). இந்தத் தம்பதிக்கு 3 பிள்ளைகள். இவா்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூா்களில் வசித்து வருவதால், சிங்கனூரில் உள்ள வீட்டில் ஏழுமலை, செல்வி ஆகியோா் மட்டும் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், கணவன், மனைவி இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல, புதன்கிழமை அதிகாலையில் ஏழுமலைக்கும், செல்விக்கும் இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஏழுமலை, மனைவி செல்வியை கத்தியால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், ஏழுமலை அங்கிருந்து சென்று திண்டிவனம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா், திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக்குப்தா ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா்.

இதையடுத்து, செல்வியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தக் கொலை தொடா்பாக மயிலம் போலீஸாா் ஏழுமலை மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT