விழுப்புரம்

திமுகவின் ஊழலை பாஜகவால் மட்டுமே தட்டிக்கேட்க முடியும்: அண்ணாமலை

11th Feb 2022 01:49 PM

ADVERTISEMENT

 

திமுகவின் ஊழலை பாஜகவால் மட்டுமே தட்டிக்கேட்க முடியும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இம்மாவட்டத்தில் போட்டியிடும் 76 பாஜக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அண்ணாமலை பேசியதாவது:

பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நாட்டில் தனிமனித வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 57 லட்சம் இலவச கழிப்பறைகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது. சிறு, குறு வியாபாரிகளின் நலன் கருதி முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கிலோ ரூ. 42-க்கு மத்திய அரசு அரிசியை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு ரூ.2 விலையில் கொடுக்கிறது. அதை தான் மாநில அரசு இலவச அரிசியாக தமிழகத்தில் வழங்குகிறது. இதை மாநில அரசின் திட்டம் போல செயல்படுத்துகின்றனர்.

கரோனா காலக்கட்டத்தில் 8 கோடி ஏழைகளுக்கு 2 ஆண்டுகள் இலவச அரிசி உள்ளிட்ட பொருள்களை மத்திய அரசு வழங்கியது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகைக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. கடன் வைத்தவர்களில் 73 சதவீதம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இதுவரை திமுக நிறைவேற்றவில்லை. இதை கேட்டால் இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆட்சி இருப்பதாக திமுக பதில் சொல்கிறது. இதுபோன்ற சம்பவங்களால், ஆட்சிப் பொறுப்பேற்ற 8 மாதங்களிலேயே திமுக மீது மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. நீட் தேர்வை ஆதரிப்பதால் பாஜக மாநில அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. பாஜக வேட்பாளர்களை திமுக மிரட்டுகிறது. பாஜகவால் மட்டுமே திமுக ஊழலைத் தட்டிக்கேட்க முடியும்.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி பேரூராட்சியில் அமைச்சர் மஸ்தானின் மனைவி, மகன் வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர். திமுக தலைமை போல கோபாலபுரம் மாடலை அமைச்சர்களே அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஊழல்வாதிகளால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. மத்திய மோடி அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் அனைத்து குடிமக்களும் பயனடைந்துள்ளனர். கரோனா தடுப்பூசியை 100 கோடி பேருக்கு செலுத்தியதே மோடி அரசின் மிகப்பெரிய சாதனை. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்ரை ஒட்டி தனது திட்டம் போல மாநில அரசு அமல்படுத்துகிறது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கிறிஸ்தவர்கள் 25 பேர், இஸ்லாமியர்கள் 8 பேர் வேட்பாளர்களாக பாஜக நிறுத்தியுள்ளது. அனைத்து மதத்தினருக்குமான கட்சியாக பாஜக விளங்குகிறது எனத் தெரிவித்ததுடன் தமிழகத்தை பொருத்தவரை திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்றார் அண்ணாலை.

இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் ஏ.டி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத், மாநில செயற்குழு உறுபினர்கள் வி.ஏ.டி.கலிவரதன், சிவ.தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலர்கள் ராம.ஜெயக்குமார், பாண்டிய், மாவட்ட பொருளாளர் சுகுமார், மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவர் தாஸசத்யன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இரவு 10 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதி

ADVERTISEMENT
ADVERTISEMENT