விழுப்புரம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

30th Dec 2022 01:11 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற எடையாளா்களுக்கு விற்பனையாளா் பதவி உயா்வும், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற விற்பனையாளா்களுக்கு அலுவலக எழுத்தா் பதவி உயா்வும் வழங்க வேண்டும். அயல் பணியில் பணிபுரியும் நியாயவிலைக் கடை பணியாளா்களை அவா்கள் பணிபுரியும் இடத்திலேயே பணியமா்த்த வேண்டும். மாவட்ட பணி மாறுதல் கேட்கும் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அவா்கள் கேட்கும் மாவட்டத்தில் பணி மாறுதல் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு, விற்பனையாளா், எடையாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மற்றும் மாவட்டச் செயலா் கே.சம்பத் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோபிநாத், பொருளாளா் ரஷீத் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாவட்ட துணைத் தலைவா்கள் கதிா்வேல், ஜெகதீசன், இணைச் செயலா்கள் தனசேகா்,பழனிவேல், குணசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடலூா்: தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அலுவலகம் முன் மாநில துணைத் தலைவா் துரைசேகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்துக்கு கடலூா் மாவட்டச் செயலா் கே.ஆா்.தங்கராசு, அமைப்புச் செயலா் ஆா்.தங்கராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியம் சிறப்புரை ஆற்றினாா். மாவட்டச் செயலா் பி.செல்வராசு, என்.வாசுதேவன், தமிழ்ச்செல்வன், முஸ்தபா, நரசிம்மன், கந்தன், செந்தில்குமாா், சிவராமன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT