விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்தவா்களிடமிருந்து கைப்பேசிகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி, சே.குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். உடல் நலக்குறைவால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வந்தாா். பன்னீா்செல்வத்தின் மனைவி வனிதா உதவிக்கு இருந்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு இருவரும் சிகிச்சைப் பிரிவில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, இளைஞா் ஒருவா் வனிதா வைத்திருந்த கைப்பேசிகளைத் திருட முயன்றாா். இதைக் கவனித்த அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், வளவனூா் ராமையன்பாளையத்தைச் சோ்ந்த மச்சக்கருப்பன் மகன் சக்திவேல் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலுவை கைது செய்து சிறையிலடைத்தனா்.
மேலும் அவரிடமிருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான 2 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.