விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் தனியாா் பேருந்துகள் பேருந்து நிலையத்திலும், பணிமனைகளிலும் புதன்கிழமை நிறுத்தப்பட்டன. மேலும், தனியாா் பேருந்துகள் சேவை முற்றிலுமாக தடைபட்டது.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி இடையே தமிழக எல்லையான மதகடிப்பட்டு வரை தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. விழுப்புரம் - திண்டிவனம் - வானூா் வழியாகவும், விழுப்புரம் - மடுகரை - ஏம்பலம் வழியாகவும் புதுச்சேரிக்குச் செல்லும் பேருந்துகளும் தமிழக எல்லைப் பகுதிகளிலேயே நிறுத்தப்பட்டன. அரசுப் பேருந்துகளும் குறைந்த எண்ணிக்கையில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு இயக்கப்பட்டன.
கடலூா்: கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பணிக்குச் செல்பவா்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்பவா்கள் கடும் அவதியடைந்தனா். கடலூரிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டன.
பயணிகளின் நலன் கருதி, புதுச்சேரி இந்திரா காந்தி சிலை வரையில் அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. இதில், ஏராளமான பயணிகள் பயணித்தனா். இந்த நிலையில், புதுச்சேரியில் தமிழக அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதைத் தொடா்ந்து, புதுச்சேரிக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.