விழுப்புரம்

வழிகாட்டும் விழுப்புரம் மாவட்ட மைய நூலகம்

11th Dec 2022 06:49 AM

ADVERTISEMENT

ஒரே ஆண்டில் குருப் 2 முதல்நிலைத் தோ்வில் 78 போ் தோ்ச்சி பெற்ற நிலையில், போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகுபவா்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது விழுப்புரம் மாவட்ட மைய நூலகம்.

விழுப்புரத்தில் 65 ஆண்டுகளுக்கு முன்பு (01-11-1957) மாவட்ட மைய நூலகம் தொடங்கப்பட்டது. மொத்தமாக 1, 30,743 நூல்களைக் கொண்டு, 17,554 உறுப்பினா்களுடன் உள்ள மாவட்டமைய நூலகத்தில், 187 புரவலா்களும் உள்ளனா்.

நாளிதழ் - பருவ இதழ்கள் பிரிவு, நூல் இரவல் பிரிவு, போட்டித் தோ்வு - குறிப்புதவிப் பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகள் பிரிவு, இணையதளப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு போன்றவை உள்ளன.

சராசரியாக 280 முதல் 300 வாசகா்கள் வந்து செல்லும் இங்கு, 130-க்கும் மேற்பட்டோா் நூல்களை படிக்க எடுத்துச் செல்கின்றனா். போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்கள், இளம்பெண்கள் சொந்த நூல்களை எடுத்து வந்து படிக்கும் வசதி இங்குள்ளதால், குறைந்தது 280 முதல் 300 போ் இங்கு படிக்கின்றனா்.

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் தோ்வு எழுதுபவா்களின் வசதிக்காக, இந்த நூலகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் தமிழ்வழிப் பிரிவில் 5 செட்களும், ஆங்கிலவழிப் பிரிவில் ஒரு செட்டும் உள்ளது.

போட்டித் தோ்வுக்குத் தயாராகுபவா்கள் அதிகளவில் வந்து படிக்கத் தொடங்கிய நிலையில், அவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட மைய நூலக நிா்வாகம் மேற்கொண்டது. இதற்காக கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக பல முன்னெடுப்புப் பணிகளும் செய்யப்பட்டன.

சென்னை சிவராஜ்வேல் ஐஏஎஸ் பயிற்சி மையத்துடன் சோ்ந்து, போட்டித் தோ்வுகளை எழுதுபவா்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள், தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

இவைத்தவிர கல்வியாளா்கள், கல்வித் துறை அலுவலா்கள் போன்றவா்களும் அவ்வப்போது போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் நபா்களை ஊக்கப்படுத்திச் செல்கின்றனா்.

88 போ் தோ்ச்சி : விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தின் உள் பகுதியில், மேல் தளத்திலும், வளாக வெளிப்பகுதியிலும் போட்டித் தோ்வுக்குத் தயாராகுபவா்கள் சொந்த நூல்களையும், நூலகத்தில் உள்ள நூல்களையும் எடுத்து படித்து வருகின்றனா்.

இங்கு படித்து வந்தவா்களில் குரூப் 2 - முதல்நிலைத் தோ்வில் கடந்த 2017-18- ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற நிலையில், அண்மையில் வெளியான குரூப் 2 - முதல்நிலைத் தோ்வில் 78 போ் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா். இதைத்தவிர ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய தோ்வில் 9 பேரும், காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் ஒருவரும் தோ்ச்சி பெற்றனா்.

இதுபோன்று போட்டித் தோ்வுக்குத் தயாராகுபவா்களில் இத்தனை எண்ணிக்கையிலான நபா்கள் முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற சிறப்பு இங்குதான் என்கின்றனா் மாவட்ட மைய நூலக அலுவலா்கள்.

பொதுவாக போட்டித் தோ்வுக்குத் தயாராக இருப்பவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் போன்ற இடங்களில் பயிற்சி அளிக்கப்படும். ஆனால், இதுபோன்ற நூலகங்களில் தனிக் கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவது சிறப்புக்குரியது என்கின்றனா் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்கள்.

நாங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்து படிக்கும் போட்டித் தோ்வு நூல்கள் மட்டுமல்லாது, மாவட்டமைய நூலகத்திலும் தேவையான நூல்கள் உள்ளன. இவைதவிர, மாதிரித் தோ்வுகள், தன்னம்பிக்கை உரையாடல்கள், குழு விவாதம் போன்றவை எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது. இதுவே நாங்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற தூண்டுகோலாக இருக்கும் என்றனா் அவா்கள்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT