விழுப்புரம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு ஒத்திவைப்பு

8th Dec 2022 06:01 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையை டிசம்பர் 13 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் -ஒழுங்கு) மீதும், புகார் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யைத் தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

நவம்பர் 30-ஆம் தேதி அப்போதைய உள்துறைச்செயலரும், தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே. பிரபாகர்  அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகி சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தும் ஆஜராகவில்லை. 

இதையடுத்து வெள்ளிக்கிழமை (டிச. 2) நடைபெற்ற விசாரணையின் போதும் பிரபாகர் ஆஜராகவில்லை.  இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் அளிக்கத் தயாராக இருந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டிருப்பதால் ஆஜராக இயலாத நிலை ஏற்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையின் போது தெரிவித்தனர். 

இதையேற்றுக்கொண்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.புஷ்பராணி உத்தரவிட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT