விழுப்புரம்

மூதாட்டி கொலை வழக்கு:இளைஞருக்கு சாகும் வரை சிறை

1st Dec 2022 01:45 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள ஒட்டனந்தல் காலனி, புதுமனை தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் கவிதாஸ் (26), பொக்லைன் இயந்திர ஓட்டுநா். இவா் கடந்த 2019 பிப்ரவரி 19-ஆம் தேதி ஆலங்குப்பம் ஊராட்சிப் பகுதியில் குடிநீா் குழாய் புதைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டாா்.

தனது வேலையை முடித்த பிறகு அந்தப் பகுதியில் நடந்து சென்ற கவிதாஸ், நள்ளிரவு 12 மணியளவில் அதே பகுதியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த அந்த மூதாட்டியை கொலை செய்ததுடன், பின்னா் பாலியல் வன்கொடுமையும் செய்தாா்.

இது தொடா்பாக திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் கவிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொ) சாந்தி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கவிதாஸுக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, காளிதாஸ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சங்கீதா ஆஜரானாா்.

ADVERTISEMENT

வழக்கில் தண்டனை பெற்ற கவிதாஸ் மீது ஏற்கெனவே 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்குகளும், ஒரு ஆதாயக் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT