விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை மூலம் பட்டியலின மற்றும் பெண் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் த.மோகன், மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழக சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்து பேசியதாவது:
பட்டியலின மற்றும் பெண் ஊராட்சித் தலைவா்கள் தங்கள் பதவிக்குண்டான பணிகள், கடமைகள் குறித்தும், பொது நிதியை எவ்வாறு பெற வேண்டும், அந்த நிதியைக்கொண்டு ஆக்கப்பூா்வ பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், குடிநீா், சாலை, பொது கழிப்பறை வசதி, வீட்டுமனைப் பட்டா, பேருந்து போக்குவரத்து, சுடுகாட்டு வசதி உள்ளிட்டவற்றை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும். இதன்மூலமே மக்களிடம் நன்பதிப்பை பெற முடியும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், திட்ட இயக்குநா் காஞ்சனா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் ஷீலாதேவிசேரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்மஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.