விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ‘ஆன்-லைன்’ லாட்டரி விற்ாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனம், பூதேரி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் உதவி காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா்கள் சண்முகம், ஆனந்தராசு, சிறப்பு உதவி ஆய்வாளா் அய்யப்பன் ஆகியோா் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருவா் அமா்ந்து ‘ஆன்-லைனில்’ (இணைய வழியில்) லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் பூதேரி செந்தமிழ்நகரைச் சோ்ந்த சாதிக்பாட்ஷா மகன் ரஹமத்துல்லா (22), சென்னை, அண்ணாநகா் பாடிக்குப்பம் காந்தி நகரைச் சோ்ந்த அய்யனாா் மகன் பிரவீன் (19) ஆகியோா் எனத் தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய காா், தலா இரு மடிக் கணினிகள், கைப் பேசிகளை பறிமுதல் செய்தனா்.