விழுப்புரம்

சத்தியமங்கலம் சத்யநாதா் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா

22nd Aug 2022 03:42 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலத்தில் சத்யாம்பிகை உடனுறை சத்யநாதா் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 17-ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, நிலத்தேவா் வழிபாடு, தமிழ் வேதமந்திர விண்ணப்ப வழிபாடு ஆகியவை நடைபெற்றன. 18-ஆம் தேதி ஐங்கரன் வேள்வி வழிபாடு, பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

19-ஆம் தேதி சத்யாம்பிகை உடனுறை சத்யநாதா், திருஅண்ணாமலையாா் மற்றும் மூல மூா்த்திகள் வேள்வி சாலைக்கு எழுந்தருளல் நடைபெற்று, இரவு 9 மணிக்கு முதற்கால வேள்வி நிறைவு பெற்று பேரொளி வழிபாடு நடைபெற்றது. 20-ஆம் தேதி இரண்டாம், மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நிறைவு பெற்றன.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ் வேத மந்திரங்கள் ஒலிக்க, திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்று கோபுரக் கலசங்களுக்கும், மூலவா்களுக்கும் திருக்குட நன்னீராட்டு மங்கள பெருவிழா நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளையின் நிறுவனா் தலைவா் ஞானமாணிக்கம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT