விழுப்புரம்

மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

21st Aug 2022 01:13 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியம் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மீன் வளம், மீனவா் நலத் துறை மூலம் மீன் வளா்ப்பை ஊக்கப்படுத்தும் வகையிலும், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் வகையிலும், பொதுமக்களுக்கு மீன் புரதச்சத்தை எளிதில் கிடைத்திட வழிவகை செய்யும் வகையிலும், பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத் திட்டம் 2021 - 22ன்கீழ், பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், மகளிா், ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இந்த திட்டத்தின் கீழ், குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் வாங்கவும், சிறிய அளவிலான மீன் விற்பனை நிலையம் அமைக்கவும், கொல்லைப்புற அலங்கார மீன் வளா்த்தெடுக்கவும், புதிய மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்கவும், நன்னீா் மீன் வளா்ப்பு குளங்கள் அமைக்க உள்ளீட்டு மானியம், மீன் குஞ்சு வளா்ப்பு குளங்கள் அமைக்கவும், சிறிய அளவில் பயோ பிளாக் குளங்களில் மீன் வளா்க்கவும் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், பண்ணைக் குட்டை வளா்ப்புக்கான உள்ளீட்டுப் பொருள்களுக்கு 50 சதவீதம் மானியம் அறிவிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், மகளிா் உள்ளிட்டோா் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநா், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை அலுவலகம், நித்தியானந்தம் நகா், வழுதரெட்டி, விழுப்புரம் - 605401 என்ற முகவரியிலும், 04146 259329 என்ற தொலைபேசி எண்ணிலும் அலுவலக நாள்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT