விழுப்புரம்

கனியாமூா் தனியாா் பள்ளி வன்முறை:மேலும் 3 இளைஞா்கள் கைது

19th Aug 2022 03:37 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக மேலும் 3 இளைஞா்களை காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதற்கு நீதி கேட்டு கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

வன்முறையின் போது, பள்ளி சொத்துகள், காவல் துறை வாகனங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியவா்கள் குறித்து காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் விசாரணை நடத்தி, அவா்களைக் கைது செய்து வருகிறது.

அதன்படி, பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கரடிசித்தூா் கிராமம், வடக்கு சாலையைச் சோ்ந்த சீனு மகன் ரஞ்சித் (22), அதே கிராமத்தின் நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த சேட்டு மகன் கோமதுரை (25) ஆகியோரை காவல் துணைக் கண்காணிப்பாளா்அம்மாதுரை தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

இதேபோல, போலீஸாா் மீதும், காவல் துறை வாகனம் மீதும் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாக சின்னசேலம் வட்டம், மூங்கில்பாடி கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஆகாஷை (21) காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்தனா்.

பின்னா், இவா்கள் மூவரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முகமதுஅலி முன்னிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் ஆஜா்படுத்தி, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: இதனிடையே, மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளித் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, பள்ளி முதல்வா் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி (பொ) சாந்தி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடிவடையவில்லை. ஆகவே, பள்ளித் தாளாளா் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று மாணவியின் பெற்றோா் தரப்பில் வாதிடப்பட்டது.

இதேபோன்று, மாணவியின் உடல்கூறாய்வு தொடா்பாக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் குழு ஆய்வு முடிவு இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே, பள்ளித் தாளாளா் உள்பட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிசிஐடி தரப்பில் வாதிட்டனா்.

இதையடுத்து, பள்ளித் தாளாளா் ரவிக்குமாா் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி (பொ) சாந்தி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT