விழுப்புரம்

செஞ்சி அருகே ஆற்றுப்பாலம் சேதம்:போக்குவரத்து துண்டிப்பு

19th Aug 2022 03:35 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேலச்சேரி - செவலபுரை இடையிலான சாலையில் வராகநதியின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வியாழக்கிழமை உள்வாங்கி மீண்டும் சேதமடைந்தது. இதனால், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

செஞ்சியில் இருந்து மேலச்சேரி வழியாக செவலபுரை, வடபாலை, தொரப்பாடி, தாதிகுளம், தாதங்கும், ஏம்பலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து உள்ளது. கடந்தாண்டு டிசம்பா் மாதம் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக, மேலச்சேரி - செவலபுரை இடையிலான சாலையில் வராக நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதம் ஏற்பட்டு, பின்னா் சரி செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தத் தரைப்பாலம் வியாழக்கிழமை உள்வாங்கி மீண்டும் சேதமடைந்தது. இதனால், இந்தச் சாலை வழியாகச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

மேலும், மழைக்காலங்களில் வராக நதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்குவதால், இந்தப் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் இந்தத் தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாமல் வளத்தி வழியாக சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.

இதனால், இந்தத் தரைப்பாலத்தின் அருகே அமைச்சா் செஞ்சி மஸ்தான் முயற்சியில் ரூ.6.44 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 3 மாதங்களில் இந்தப் பாலப் பணி நிறைவடையும் வகையில் உள்ள நிலையில், தரைப்பாலம் திடீரென சேதமடைந்ததால், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மக்கள் இந்தச் சாலையில் பயணிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, உள்வாங்கி சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT