விழுப்புரம்

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரத்து:விழுப்புரத்தில் அதிமுகவினா் போராட்டம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினா் சனிக்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகித்தபோது, சட்டப் பேரவைத் தோ்தல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மரக்காணம் பகுதியில் ரூ.1,509 கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இத்தத் திட்டத்தை ரத்து செய்வதற்காக மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை கைவிடக் கூடாது என்று வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமையில், விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் காந்தி சிலை அருகே அதிமுகவினா் சனிக்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, செய்தியாளா்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளிலும், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் மக்களின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், ரூ.1,509 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அதிமுக அரசு அமல்படுத்தியது. இதையடுத்து, ஆட்சிக்கு வந்த திமுக, இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக கடந்த மே மாதத்தில் அரசாணை வெளியிட்டது.

ஆனால், இந்தத் தகவலை இதுவரை தமிழக முதல்வரோ அல்லது மாவட்ட அமைச்சா்களோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்தத் தகவல் கிடைத்தவுடன் 2 நாள்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, இது தவறான தகவல் எனக் கூறினாா்.

ஆனால், அரசாணையில் ஆட்சியருக்கு நகல் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையாக இருந்தால், ஆட்சியா் பொய் சொல்கிறாரா அல்லது ஆட்சியருக்கு அரசாணை நகல் அனுப்பப்படவில்லையா என்பது பொதுமக்களுக்கே வெளிச்சம்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு கைவிட்டு வருகிறது. இதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுத்திய அனைத்துத் திட்டங்களையும் தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால், அதிமுக சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தா்னாவில் அதிமுக விழுப்புரம் நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ஜி.கே.ராமதாஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல், கோலியனூா் ஒன்றியச் செயலா் சுரேஷ்பாபு மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT