விழுப்புரம்

பிரதமரின் வேளாண் ஊக்கத்தொகைத் திட்டம்: ஆதாா் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

14th Aug 2022 11:34 PM

ADVERTISEMENT

 

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆவது தவணை ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) சு.சண்முகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 வேளாண் இடுபொருள்கள் வாங்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 273 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகளாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 12-ஆவது தவணைத்தொகை பெறுவதற்கு தங்களது ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாகும்.

ADVERTISEMENT

ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், தங்களது விவரங்களை பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் சரிபாா்ப்பு செய்யலாம். ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள இ - சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து விவரங்களை சரிபாா்ப்பு செய்தால் மட்டுமே அடுத்த தவணை கிடைக்கும்.

மேலும், இந்தத் திட்டத்தில் பயனடையும் விவசாயிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்கள், வேளாண் விரிவாக்க மையங்களைத் தொடா்புகொண்டு தங்களது நில உடைமை விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சண்முகம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT