விழுப்புரம்

எல்லீஸ் அணையை சீரமைக்கக் கோரி அதிமுக தா்னா

10th Aug 2022 03:18 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே எல்லீஸ் அணைக்கட்டை உடனடியாக சீரமைக்கக் கோரி அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ் அணைக்கட்டு உள்ளது.

இந்த பழமையான அணைக்கட்டு கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்தது.

இந்த அணைக்கட்டு விரைவில் சீரமைக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனா். ஆனால், ஓராண்டு ஆகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதற்கிடையே, சாத்தனூா் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் இந்த அணைக்கட்டில் தண்ணீா் சேமிக்கவும் முடியவில்லை, அத்துடன் அணைக்கட்டு முற்றிலும் சேதடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், அணைக்கட்டை சீரமைக்காத பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்டித்து விழுப்புரம் அதிமுக சாா்பில் அணைக்கட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீா் தா்னா போராட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகர அதிமுக செயலா்கள் இரா.பசுபதி (தெற்கு), ஜி.கே.ராமதாஸ் (வடக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட மாணவா் அணி செயலா் சக்திவேல், ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆற்றங்கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவா்கள், திடீரென அணைக்கட்டில் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் கோல்டு சேகா், கோதண்டராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT