விழுப்புரம்

கனியாமூா் பள்ளித் தாளாளா் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் ஒத்திவைப்பு

2nd Aug 2022 05:05 AM

ADVERTISEMENT

கனியாமூா் பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் தாக்கல் செய்ய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இது குறித்து அவரது தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், பள்ளியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

வழக்கில் பள்ளித் தளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, பள்ளி முதல்வா் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனா்.

பின்னா், பள்ளித் தாளாளா் ரவிக்குமாா் உள்ளிட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீஸாா் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனா்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி நிா்வாகிகள், ஆசிரியைகள் ஆகிய 5 பேரும் விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கடந்த 19-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் நீதிபதி (பொ) சாந்தி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் சின்னசேலம் போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு, சிபிசிஐடி போலீஸாா் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனா். ஆகவே, சிபிசிஐடி போலீஸாா் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு: இந்த நிலையில், திங்கள்கிழமை இந்த மனு நீதிபதி சாந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளித் தரப்பில் பழைய முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கு சிபிசிஐடி போலீஸாா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, முதல் மற்றும் இரண்டாவது உடல்கூறு ஆய்வு முடிவுகள் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிக்கைகள் ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பப்படவில்லை. ஆகவே, வழக்கு விசாரணை தொய்வின்றி நடைபெற எதிரிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து, மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி (பொ) சாந்தி உத்தரவிட்டாா்.

ஸ்ரீமதி தாய் நீதிமன்றத்தில் மனு தாக்கல்: உயிரிழந்த ஸ்ரீமதியின் தாய் செல்வி தரப்பில் வழக்குரைஞா் காசிவிசுவநாதன், விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதால் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கூறியிருந்தாா். மனுவை நீதிபதி சாந்தி ஏற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT