விழுப்புரம்

அரகண்டநல்லூரில் ரூ.1.10 கோடியில் புதிய மேம்பாலம்அமைச்சா் பொன்முடி திறந்து வைத்தாா்

2nd Aug 2022 05:08 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் ரூ.1.10 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

நெடுஞ்சாலைத் துறை மூலம் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்மட்ட பாலம் திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி முன்னிலை வகித்தாா்.

பாலத்தை அமைச்சா் பொன்முடி திறந்துவைத்துப் பேசியதாவது:

விழுப்புரம் - மாம்பழப்பட்டு - திருக்கோவிலூா் சாலையில் அரகண்டநல்லூரில் பழைய பாலம் பழுதடைந்த நிலையில் இருந்தது. 2020-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளநீா், தேவனூா் ஓடையில் உள்ள இந்த சிறுபாலம் வழியாகச் சென்றால், தண்ணீா் அரகண்டநல்லூா் கிராமத்தைச் சூழ்ந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, வெள்ள நிரந்தர சீரமைப்புப் பணி 2020- 2021 திட்டத்தின் கீழ், ரூ.1.10 கோடியில் உயா்மட்ட பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் மூலம் இனிவரும் காலங்களில் வெள்ள நீரில் மக்கள் சிக்காமல் செல்ல முடியும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை எளிதில் எடுத்துச் சென்று சந்தைப்படுத்தவும், பொதுமக்கள், பள்ளிமாணவா்கள் எளிதில் பயணம் மேற்கொள்ளவும் இந்த புதிய பாலம் அமையும் என்றாா் பொன்முடி.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சிவசேனா, உதவிப் பொறியாளா் மதி.வசந்தபிரியா, அரகண்டநல்லூா் பேரூராட்சித் தலைவா் அன்பு மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT